Skip to content


நதிமூலம் பாருங்கள்

வற்றா ஜீவ நதிகளுக்கும்
வீசும் கூவ நதிகளுக்கும்
கடல்தான் என்றும் நதிமூலம்
கடலைப் போல இருப்பாயே.
நதியில் தீட்டு இருக்கிறதா?
நரர்கள் தீட்டுப் படுத்துகிறார்.
கடலில் மாசு கலந்தாலும்
கிளம்பும் மேகம் தூயதுதான். 1

உனக்குள் பாவம் சேர்த்துவிடும்
உலகின் வினைகள் பலவுண்டு.
உனக்குள் புனிதம் சேர்த்துவிடும்
உயர்ந்த வினைகள் சிலவுண்டு.
புனிதம் பாவம் பிரித்தறியும்
புதிய அறிவை இன்றுபெறு.
கடலில் மாசு கலந்தாலும்
கிளம்பும் மேகம் தூயதுதான். 2

இடிகள் விழுந்தால் இசைபாடு
அடிகள் விழுந்தால் அரவணைப்பாய்.
அமேசான் நதிகள் இங்கில்லை.
ஆயி ரமுண்டு கூவங்கள்.
எதுசேர்ந்தாலும் வற்றாதே
இறைத்துப் பார்க்க முடியாதே.
கடலில் மாசு கலந்தாலும்
கிளம்பும் மேகம் தூயதுதான். 3

நிலத்தில் ஊறும் நீருக்கும்
மலத்தில் சேரும் நீருக்கும்
கடல்தான் என்றும் நதிமூலம்
கடலைப் போல இருப்பாயே
நீரின் குற்றம் எதுவுமில்லை
நிலத்தில் மலத்தில் குற்றமுண்டு.
கடலில் மாசு கலந்தாலும்
கிளம்பும் மேகம் தூயதுதான். 4

கடல்நீர் அன்பு மேகலையின்
கரத்தில் இருந்த பாத்திரம்தான்
நூறு காய சண்டிகைகள்
நிமிடம் தோறும் வந்தாலும்
கொடுத்தால் குறையப் போவதில்லை
உள்ளம் அதனால் பசியாறும்
கடலில் மாசு கலந்தாலும்
கிளம்பும் மேகம் தூயதுதான். 5


15-ஜனவரி-2011

Posted in Uncategorized.



0 Responses

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.