Skip to content


போன்ஸாய் துளி 3

பரபரப்புக்குப் பிறகே நிதானம் வருகிறது.

Posted in Notice Board.

2 comments



போன்ஸாய் துளி 2

ஒவ்வொரு படைப்பும் கலைடாஸ்கோப் மாதிரி.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு தோற்றம் காட்டும்.

Posted in Notice Board.

1 comment



போன்ஸாய் துளி 1

சாணக்கியனாக இருந்தால் அர்த்த சாஸ்திரம் எழுது. புலம்பாதே.

Posted in Notice Board.

2 comments



வாடிக்கையாளர் சேவை

சொந்தத் தொழில் தொடங்க உத்தேசித்த இளைஞனுக்கு மேலாண்மையியல் குரு உபதேசித்ததில் ஒரு பகுதி.

அறுசீர் விருத்தம்

ஹைட்ரஜன் தீர்ந்து விட்டால்
   ஆதவன் இருண்டு போவான்.
நைட்ரஜன் தீர்ந்து விட்டால்
    நற்பயிர் தழைப்ப தில்லை.
மெய்த்திறம் தன்னம் பிக்கை
    மனிதரில் தீர்ந்து விட்டால்
செய்தொழில் சிதைந்து போகும்
    சுவாசமும் மறந்து போகும்.

அலைகடல் அருகே உள்ள
   அருமணற் துகளைப் பொன்னாய்
விலைதினம் குறைத்து விற்றால்
   வாங்குமோ வளைக்க ரங்கள்?
பிலிப்கோட்லர் நூல்ப யின்று
   பொருட்களைச் சந்தை சேர்த்தும்
கலியுகச் சதிகள் செய்தால்
   கனவில்தான் நிரம்பும் கல்லா.

விளம்பரம் பொய்யாகாது.
   விளம்பரப் பொய்கள் வேண்டாம்.
விளம்பரம் உண்மை யாயின்
   உண்மையே விளம்பரம்தான்.
விளம்பரம் பொய்யே யாயின்
   பொய்யதும் விளம்பரம்தான்
களத்தினில் இறங்கும் முன்பே
    கணக்கிடு மெய்யும் பொய்யும்.

பொய்யெனத் தெரியா வண்ணம்
   பொய்யதைக் கூறினாலும்
பொய்யெனத் தெரிந்த பின்னர்
   பொதுஜனம் மகிழ்ந்திருந்தால்
பொய்யது பொய்யே இல்லை
   பொய்களும் பெயர் கொடுக்கும்.
வையகம் வெறுத்தி ருந்தால்
   விட்டபொய் பெயர்கெ டுக்கும்

நாக்கது தேனாய்ப் பேசி
   நெஞ்சிலே தூய்மை கொண்டும்
பூக்கடை திறந்தால் கூட்டம்
   புறப்பட்டு வாரா(து), ஆனால்
நாக்கிலே தேனைப் பூசி
   நெஞ்சிலே நஞ்சைக் கொண்டால்
பூக்கடை திறந்தால் கூடப்
   பொத்துவர் காதை மூக்கை.

எரிந்தபின் தீயணைக்க
   எண்பது வீரர் வேண்டாம்.
மரித்தபின் நோயாளிக்கு
   மருத்துவம் தேவையில்லை.
வரந்தரும் வாடிக்கையை
   வழிபடா விட்டால் கூடக்   
கருத்தினில் வைத்திருப்பாய்
   காலத்தால் செய்வாய் சேவை.
 
நாலுபேர் மகிழ்ந்திருந்தால்
   நால்வரைப் பார்த்துச் சொல்வர்.
நாலுபேர் சினந்திருந்தால்
   நாற்பது பேரைப் பார்ப்பர்.
நாலுபேர் நாற்ப தாகி
   நாலிரு திசைப ரப்பி
நாலுமைல் தூரத்துக்கு
   நகர்ந்துபோய் வாங்கு வாரே.

சீனிராஜ் சிவகுமார்
11-அக்டோபர்-2007

Posted in Tamil Blogs.

3 comments



பசுமைப் புரட்சி

மருத நிலமா பாலை நிலமா என்று புரியாத ஒரு பிரதேசத்தில் திருகு சொம்பு, தூக்கு வாளி தூக்கி வந்த உழத்தியிடம் உழவன் சொன்னது.

காலடியில் நிழல்பதுங்கும் உச்சி வேளை
   காற்றே தீ போலாகிக் கருக்கும் நாளில்
நீலகிரி மலைக்குளிராய் வந்து சேர்ந்தாய்
    குளிராக வந்தென்னைப் போர்த்திக் கொண்டாய்.
நாலுதிசை பார்த்துவிட்டுக் குறும்பு செய்தேன்
    நாணமுள்ள பெண்ணாகக் காட்டிக் கொண்டாய்
ஆலமரம் அதில் காகம் இருப்ப தையே
    அய்யய்யோ மறந்துவிட்டோம் போச்சே மானம்

கட்டைவிரல் வரிகள்போல் உழுது விட்டுக்
    களத்துமேட்டில் ஓய்வெடுக்கும் டக்கர் வண்டி1
கட்டழகே எனக்குமட்டும் ஓய்வில் லையா?
    களைச்சிருக்கேன் எங்கேம்மா தூக்கு வாளி?
விட்டுவிட்ட பாகங்கள் மண்ணில் கூட
    வெளிறிப்போய்க் காத்திருக்கும் கலப்பைக்காக.
திட்டமிட்ட பரப்பெல்லாம் உழுது விட்டுத்
    திரும்பிவந்த பின் தணிப்பேன் உனது தாகம்.

திருச்செந்தூர் ரோட்டிலுள்ள தொழிற்சா லையில்
    டீ.ஏ.பி2 உற்பத்தி தொடங்கி ருச்சாம்
உரக்கடையில் உன் தம்பி தகவல் சொன்னான்
    ஒத்தாசை செய்வதாக ஒத்துக் கிட்டான்.
அரைக்கிணறு நிறைஞ்சிருக்கே ஆச்சர்யந் தான்.
    அங்காள ஈஸ்வரியின் அருள் தான் எல்லாம்.
எரிஞ்சுபோன மோட்டாரில் காயில் மாத்தி
    ஏழுநாளில் கட்டவேணும் வாய்க்கால் பாத்தி.

பம்பு செட்டு மூணுநாளு வேணுமின்னு
    பங்காளி கேட்டிருக்கான், கொடுக்க லைன்னா
வம்பாகி வாய்க்காலில் தண்ணி யில்ல
    வாங்கிய கை துண்டாகி ரத்தம் பாயும்.
எம்பாகம் பெரிசுன்னு சொல்லிப் பாத்தும்
    எடுபட்ட பயலுக்குப் புரிய வில்ல
கொம்பு சீவி நிக்கிறாண்டி காதைப் பொத்தி.
    கிறுக்கனுக்குக் கழண்டுருச்சோ இருக்கும் புத்தி?

பருத்தியுடன் உளுந்தையும் போட வேணும்
    பக்கத்தூர் ஆட்களைத்தான் தேட வேணும்.
கரண்டுசப்ளை தினம் மதியம் வருமின் னாங்க.3
    கண்ணுலயே கரண்டெப்படி வச்சி ருக்கே?
சரிஞ்சிருக்கு முந்தானை எடுத்துப் போடு
    சரி சரி நான் என்ன சொன்னேன் எங்கே விட்டேன்?
மறுகரையில் கொத்தூரில்4 ராமசாமி
    மருந்தடிக்கக் கூப்பிட்டாத் தட்டமாட்டான்

பட்டணத்தில் விவசாயம் படிச்ச நம்ம
    பலசரக்குக் கடைக்காரர் மவந்தான் சொன்னான்
சொட்டுகூட இஸ்ரேலில் வீணாகாம
    சிந்தாமச் சிதறாமப் பாய்ச் சுறாக.
நட்டமென்ன நம்மசனம் கத்துக் கிட்டா?
    நம்மபுள்ள காலத்தில் நிலம மாறும்.
வெட்டவெளி ஆகாயம் கிணத்த நம்பி
    வெள்ளாமை காத்திருந்தா என்ன தேறும்?

ஓடோடி வந்து பாத்தா உச்சி வானில்
    ஊர் தாண்டிப் போகுதடி பாழாய்ப் போன
நாடோடி மேகங்கள் நம்ப வேண்டாம்.
    நீர்வேண்டி மழைக் கஞ்சி5 கேட்க வேண்டாம்.
ஆடாமல் அசையாமல் ரயில் ரோட்டோரம்
    ஆமணக்கு நிக்குதடி வானம் பார்த்து.
ஓடாத ஓடைக்குள் மணற்ப ரப்பில்
    ஒருவருஷம் ஆச்சுதடி ஈரம் பார்த்து.

வெல்லத்தை இப்படித்தா, கூழை ஊத்து
    வெஞ்சனம் உன் விரல்பட்டுத் தித்திப் பாச்சு
கல்விளைஞ்ச பூமியைநம் பாட்டன் பூட்டன்
    பொன்விளையத் திருத்தித்தான் வச்சிருக்கான்
எல்லாமே சரியாகப் போச்சு துன்னா
    ஏழெட்டுப் பவுனெடுத்துத் தாரேன் புள்ள
இல்லாமப் போனாலும் குத்தமில்ல
    இந்தியாவின் நிதிநிலம மோசமில்ல.


எண்சீர் விருத்தங்கள்
30-செப்டம்பர்-2007
சீனிராஜ் சிவகுமார்


அடிக்குறிப்புகள்:
1. நகர்ப்புற வாசகர்களுக்கு: டக்கர் வண்டி - ட்ராக்டர் வண்டி அல்லது உழவு வண்டி. இந்த இயந்திர மாட்டின் பின்னால் டில்லர் என்கிற கலப்பை பொருத்தப்பட்டிருக்கும்
2. Di ammonium phosphate fertilizer
3. நீர்ப்பாசனத்துக்கான மின்சாரம் ஷிஃப்ட் முறையில் விநியோகிக்கப் படுவதுண்டு. காலைக்கரண்டு, மாலைக்கரண்டு என்று சொல்வார்கள். சமயங்களில் டார்ச் லைட், மண்வெட்டி எடுத்துக் கொண்டு பூச்சிபொட்டுக்குப் பயப்படாமல் நள்ளிரவிலும் விவசாயிகள் செல்வதுண்டு.
4. கொத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் கோவில்பட்டி வரையுள்ள தெலுங்கு பேசும் கிராமங்களில் புதிதாக உருவானகுடியிருப்புப் பகுதிகளை இப்படித்தான் அழைப்பார்கள்.
5. வீடு வீடாகச் சென்று மழை வேண்டிக் கஞ்சியை யாசகம் பெற்று அருந்துவதுண்டு. மனிதசாதியில் நடக்கிறதோ இல்லையோ, கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பதும் உண்டு.

Posted in Tamil Blogs.

3 comments



தொடக்கம்

ஆனா ஆவன் னாவில் தானே
கம்பனும் எழுதப் படிக்கத் தொடங்கினான்?
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஓடு வோரும்
தவழ்ந்து தானே தளிர்நடை பழகினர்?
ஜெயிக்கும் ஆசை செயலாய் மாறத்
தயக்கம் மட்டும் தடுக்கும் கெடுக்கும்.
தொடங்க நினைப்போம் நினைக்கத் தொடங்குவோம்
தொடங்கு வதற்குள் முடிந்தே போவோம்.
மூளையின் ஏதோ மூலையில் லட்சியம்
கிடக்கும் பாவம் கேட்பா ரற்று.
வழியில் தடைகள் வருவதைக் காட்டிலும்
மனசில் குறுக்கே மலைச்சுவர் முளைக்கும்.
எவரெஸ்ட் உயரம் உயரமா என்ன?
சுற்றி எழுப்பிய சுவரை விடவா?
கிழக்கே கவனம் மேற்கே பயணம்
கொலம்பஸ் வெற்றி கொடுக்குமா அதிர்ஷ்டம்?
காலொரு திசையில் கனவொரு திசையில்
எதிரில் குழிகள் எங்கே விழிகள்?
வரைபடம் ஒன்றை வைத்துக் கொள்வோம்
வழித்துணை யாக வருமென் வார்த்தை.
திகைத்து நின்றால் தூரம் கூடும்.
தொடங்கி விட்டால் மைல்கள் குறையும்.
தடைகளை நினைத்தால் இலக்கை இழப்போம்
இலக்கை நினைத்தால் தடைகளைக் கடப்போம்.
எத்தனை மைல்கல் எதிரில் வருதோ
அத்தனை உயரம் அடைவோம் நிச்சயம்.
வழியில் வறுக்கும் வெயிலைத் தாங்க
நிழல்தரு மரங்களின் முகவரி அறிவோம்.
இளைப்பா றுதலா சோம்பல் ஆகும்?
அடுத்த நடைக்கது க்ளுக்கோஸ் ஆகும்.
மொத்தப் பயணமும் மலைப்பைத் தருதா?
பிரித்துப் பார்த்தால் எளிதாய் இருக்கும்
க்ளுக்கோஸ் ஃப்ரக்டோஸ் என்சைம் கலந்த
எச்சில் துளிகளைச் சேர்க்க நொதிக்க
எத்தனை மரஞ்செடி தேடின குளவிகள்?
தேனஃ(து) இனிக்கும் துளிகளின் தொகுப்பு
மூலக் கூறுகள் அணுக்களின் தொகுப்பு
உடல்கள் எல்லாம் செல்களின் தொகுப்பு
சாதனை சிறுசிறு செயல்களின் தொகுப்பே


 


நிலைமண்டில ஆசிரியப்பா


சீனிராஜ் சிவகுமார்
23-செப்டம்பர்-2007

Posted in Tamil Blogs.

3 comments



கொடுக்கிற தெய்வம்…

வரைபடத்து நதியைப் - போல்
  வெட்டுகின்ற மின்னல்
தெருவிளக்காய் அடிக்கும் - பின்
  தார்பூசும் இருட்டு

பாலித்தீன் பைக்குள் - தலை 
  பத்திரமாய் இருக்கும்
ஓலமிடும் காற்றில் - சருகு
  ஓடி விளையாடும்

வீடு வந்து சேர்ந்தேன் - அவ்
  வினாடி முதல் வானம்
காடுகரை ஊர்கள் - தமைக்
  குளிப்பாட்டு தம்மா
  
மழை பெய்த வேளை - என்
  மனசெங்கும் ஈரம்
அழுக்கான எந்தன் - சிறு
  அரண்மனையா தப்பும்?

மகன் படிக்கும் ஏட்டை - வான்
  மழை வந்து படிக்கும்
புக வசதி செய்து -  கூரை
  பூப்பூவாய்த் தெளிக்கும்

பருப்பு வைத்திருந்த - மண்
  பானைக்குள் இன்று
கருப்பு நிற திரவம் - மனம்
  கண்ணீரில் மூழ்கும்

அகல் வெளிச்சம் நடுங்க - என்
  அரசி முகம் இருளும்
யுக அவதி மறைய - நல்
  இயற்கையென்று அருளும்?

தற்காலிக  நதியாய்- எம்
  தெரு நிறைந்து பாயும்
விற்காமல் கிடக்கும் - முள்
  விறகு படகாகும்

விரும்பியழைக்காமல் - நீர்
  வீட்டுக்குள் நுழையும்
இரண்டடிக்கு மேலே - அட
  உயர்ந்ததம்மா வாழ்க்கை

கட்டில்மேல் குடும்பம் - இடம்
  கிட்டாமல் விழிக்கும்
பெட்டியையும் தூக்கி - இடப்  
  பக்கத்தில் வைத்தோம்
  
அடுப்படியில் பசியை - மழை
  அணைத்து விட்டிருக்க
இடிக்குரலில் வானம் - எனை
  எள்ளி நகையாடும்.


சீனிராஜ் சிவகுமார்
15-செப்டம்பர்-2007

Posted in Shivamaha.

34 comments



மாற்றம்

நேற்றுவரை நீபார்த்த நிலைநாளை இல்லை
மாற்றந்தான் எப்போதும் மாறாத தொல்லை
ஆற்றலதைக் கூட்டிக்கொள் ஆகாத தென்ன?
தோற்றிருந்தால் இடைவேளை, தொடரட்டும் வெற்றி

பசுமந்தை என்றைக்கும் புல்வெளியில் மேயும்
அசைபோடா மனிதயினம் அதை க்ளோனிங் செய்யும்
மசிபோன்ற ராத்திரிகள் மின்சாரம் கேட்கும்
நிசந்தான்யா அமைந்துவிடும் நேனோரா ஜாங்கம்

ஜீன் திருத்தப் பணமிருந்தால் ஜூன்மாதச் சாவை
ஆண்டுபல போனாலும் அண்டாமல் ஓட்டி
ஆண்டவனாய்த் தொழில்நுட்பம் ஆசிதரக் கூடும்.
வாண்டுகட்கு நாளைக்கு வயசே ஏறாது.

குணம்மாற்றி நிறம்கூட்டிக் குழந்தைகள் பெற்று
மனம்போன போக்கெல்லாம் மாயங்கள் செய்யும்
தினமொன்று வரும்போது திகைக்காதே தோழா
மனிதர்கள் விஞ்ஞான மாதிரிகள் ஆவர்

அப்பாவின் நோய்ஒன்றும் ஆஸ்தியல்ல நாளை.
முப்போதும் உணவெல்லாம் மாத்திரைகள் மூலம்.
எப்போதும் எந்திரந்தான் எதிர்கால மூளை.
தப்பேதும் நேர்ந்துவிட்டால் ஸ்தம்பிக்கும் ஞாலம்

வேடிக்கை நாள்தோறும் விஞ்ஞானம் காட்டும்.
வாடிக்கை மாலைக்குள் வேறுவழி தேடும்.
கோடைக்குள் வரக்கூடும் கோடிமுறை மாற்றம்.
நீடிக்க நிலைத்திருக்க நீமாற வேண்டும்
 
நாட்டுக்குள் நடப்பதனை நானறியா விட்டால்
நேற்றுசெய்த உணவைப்போல் நமநமத்துப் போவேன்.
நாட்டங்கொள் கண்டுபிடி நாளைய சேதி.
மாற்றந்தான் உன்வழியில் முன்செல்லும் ஜோதி.

புலிவந்து நின்றதுபோல் பதறுவது வேண்டாம்
கிலிதந்த மாற்றங்கள் கேளிக்கை யாகும்.
இலவசமாய் வந்திடுமா இன்பங்கள் என்றும்?
வலிதந்த மாற்றங்கள் வழிகாட்டிப் போகும்.

மடிமீது வாய்ப்புகளை மாற்றங்கள் போடும்.
இடியென்று நினைக்காதே இனிதாகும் வாழ்க்கை.
விடிவெள்ளி வேறப்பா விண்மீன்கள் வேறு.
அடையாளம் கண்டுபிடி ஆகாயம் பக்கம்.

சீனிராஜ் சிவகுமார்
9-செப்டம்பர்-2007

 

Posted in Tamil Blogs.

3 comments



குடிமகன்

அம்மா இரண்டாம் தாரம்,
ஆல்கஉறால் முதல் தாரம்.

வழக்கமாய் எட்டு மணிக்கு
வருவார் அப்பா.

தள்ளாடுகிறோம்.

அம்மாவின் கன்னத்தை
முத்தமிடும் அவர்
கை.

மனசில் பதிந்தது
ஐவிரல் ரேகை.

அவர் திருவாய் மலர்கையில்
மாசுபட்டது வளிமண்டலம்.
வாசனையால்…
வார்த்தைகளால்

திறந்து கொள்ளும்
பக்கத்து வீட்டுக்
காதுகள்.

வெங்காயம் நறுக்குவாள் அம்மா
அழுகை வரும் போது.

கரைந்தே இருக்கும்
தங்கையின் நோட்டுப் புத்தகத்தில்
எழுத்துக்கள்.

மஞ்சனெத்தி விறகொடித்து
அடுப்பூதுவாள் அக்கா.

பற்றியெரிகிறது
வாழ்க்கை.

———————————————————-
சீனிராஜ் சிவகுமார்
8-செப்டம்பர்-2007

உங்கள் அகப் பார்வைக்கு:
இந்த நிகழ்வைச் சொல்லும் மாந்தர் ஆணா பெண்ணா?
அக்கா அழுதாளா இல்லையா?

Posted in Tamil Blogs.

2 comments



வாழையடி வாழை

வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
 வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
 வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
 ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
 ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லை

பேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
 பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
 எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
 அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
 பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சு

காதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
 கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
 பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
 போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
 பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?

இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
 இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
 பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
 உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
 அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.

வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
 வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
 போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
 மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
 மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.
————————————————————————————-
05-செப்டம்பர்-2007 
சீனிராஜ் சிவகுமார்
எண்சீர் விருத்தங்கள்

————————————————————————————-
 (ஒரு பின்குறிப்பு: இதை எழுதத் தூண்டிய படைப்புகள் இரண்டு. ஒன்று பாரதிதாசன் எழுதிய "தவிப்பதற்கோ பிள்ளை". மற்றொன்று ராபர்ட் கியோசாகி எழுதிய Rich dad Poor dad வரிசையில் முதல் புத்தகம். படித்துப் பாருங்களேன. உங்கள் பொருளாதார அறிவில் வரவேற்கத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும்.)
————————————————————————————-

Posted in Tamil Blogs.

7 comments