நான் கடவுள் - Movie Review
உள்ளிருப்பதுவும், வெளியே எல்லாமுமாய் இருப்பதுவும் ஒன்றுதான்,
நான் தான் அதுவும். நான் கட்டுக்களற்றவன், சொந்தம் - பந்தம் - கர்மா என எந்த தளையிலும் சிக்காமல் அறுத்தெரிபபவன்.
ஒரு எல்லைக்குள் அடங்காதவன், நீர், நிலம், ஆகாயம்,வளி, நெருப்பு என
பிரபஞ்சம் முழுதும் வியாபித்துக் கிடப்பவன்.
நான் கடவுள் ! நான் கால பைரவன் " - என கங்கைக் கரையிலுள்ள காசி மாநகரில் சுடுகாட்டில் கெட்டவர்களை அடித்து கொன்று, பிணங்களை தின்று கர்மம் போக்கும் யோகம் பயிலும் ஒரு அகோரீ-யின் வாழ்வைப் பற்றிய கதை.
வியாபார வலையிடுக்கில் விழி பிதுங்கி மற்றவர்கள் பார்ப்பதற்கே பயப்படும்
கதைகளனில் பயணித்து, பக்கத்தில் நின்று, படமாகவே தந்து விட்டார் பாலா. அந்த துணிச்சலுக்காக எழுந்து நின்று கை தட்டுகிறேன்,
பல தியேட்டர்களில் இளைஞர்கள் தட்டுவது போல.
தாண்டவன், ருத்ரன், அம்சவள்ளி, ஆசான், முருகன், மாங்காட்டு சாமி, நீதிபதி,
கஞ்சா சாமியார்கள், டிம்பிள், தேடிப்போகும் அப்பா, மகள்,
பாசத்தில் தவிக்கும் அம்மா, காசி சாஸ்திரி, அவர் மனைவி, குரு,
கஞ்சா கொளுத்த போய் மந்திர உச்சாடானத்தால் வயிறு கலங்கி ஓடும் கான்ஸ்டபில்,
அகோரமாய் வருபவர், எப்போதும் சிரித்தது அலப்பரை பண்ணும் சிறுவன்,
பிச்சைக்கார பட்டாளம் - என எந்தஒரு கதாபாத்திரமும் வீண டிக்கப் படவில்லை.
" அவன் பயந்து நான் இது வரைக்கும் பார்த்ததில்லை .
அள்ளிட்டு வர படையப்பன் மண்ணுல்ல, அவன் மலை . நான் தல, மத்தவன் எல்லாம் முண்டம் . டேய் நான் சிம்புடா, எங்கப்பா ஒரு சொம்புடா " - போல வசனங்களை வைத்து கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்த
முயற்சிக்கும் மூட வேலைகள் இல்லை பாலாவிடம்.
கஞ்சா கிடைக்குமிடம் தெடிப் போகும் போது, வழி ஓரத்தில் தூங்குபவனை
கண்ணிமைக்கும் நேரத்தில் உலுக்கிப் போடுவது, கை வச்ச போலீஸ்காரனை
துவம்சம் பண்ணுவது, எல்லோரும் அலறி நிக்க நீதி பதிக்கு முன்னால
யோகமாய் உட்கார்ந்து ஆஸீர்வதிக்கறது,
எவன்டா சாமி-இன்னு அஹம் பிரமாஸ்மி வியாக்கியானம் குடுக்கறது - ன்னு படம் முழுக்க ருத்ரன் கேரக்டரே ' நான் கடவுள்' - இன்னு பேசி திரையை விட பெரிசா விஸ்வரூபம் எடுத்து நிக்குது.
அதுவும் அந்த கயிற்று கட்டிலில் தூங்கியவனை கண நேரத்தில்
கலங்கடிக்க கவிழ்த்துப் பொட்டுவிட்டு நடக்கும் அந்த கம்பீர நடை சொல்கிறது " நான் கடவுள் மூடிட்டு போடா" - ன்னு.
காசில இருந்தப்ப ஷூட்டிங் முடிஞ்சும் கூட மேக்கப், காஸ்டியூம் கலைக்காம நாள் பூரா அப்படியே திரிய சொன்னாராம் பாலா,
ஆரியாவையும்,பூஜாவையும்,இன்னும் எல்லாரையும். அப்பத்தான் அவங்களால கேரக்டரா வாழ முடியும் இன்னு ஆர்டர் போட்டாராம். பிச்சைக் காரர்களாய்,அகோரீயாய்,சாமியாராய்,குருட்டுப் பிச்சைக் காரியாய், இயக்குநராய்,ஒளிப்பதிவாளராய்,இசையமைப்பாளராய் - என எல்லோரும் மூன்றரை ஆண்டு தவம் இருந்திருக்கிறார்கள். அது ஒவ்வொரு ப்ரமிலும் தெரிகிறது.
ஆரியா,பூஜா என யாருமே தெரிவதில்லை.ருத்திரனும்,அம்ச வள்ளியும், இன்ன பிற கேரக்டர்களுமே தெரிகின்றன. படம் முடிந்தும் கூட கூடவே வருகின்றன.
அந்த ப்ரோக்கரை அடிக்கும் அடி, எடுத்த விதம், ராஜாவின் இசை என
எல்லாமுமாய் கலந்து ' மரண அடி'-க்கு செல்லுலாய்டில் அர்த்தம் தருகிறது.
சாமியார் சொல்வது போல "கொஞ்சம் தமிழ் பேசினாலும்,விவகாரமான அர்த்தம்" உள்ள வசனங்களில் ஜெயமோகன் வெளிப்படுகிறார். "நெருப்புக்கு ஏதூடா சுத்தம், அசுத்தம் எல்லாம்!" - மக்கள் " அட!" போடுகிறார்கள்.
இளையராஜா படம் முழுக்க தன்னை தந்திருக்கிறார்.
பாலா - தவம் இருந்திருக்கிறார்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட்டாகுமா, எல்லோருக்கும் பிடிக்குமா - போல பல கேள்விகள் ஈர்ந்தாலும், நான் கடவுள் ஒரு மைல் கல்.
சேது, நந்தா, பிதா மகன், இப்போது நான் கடவுள் என பதினைந்து வருடத்தில்
நறுக்கென்று நான்கே நான்கு படம் தந்தவர். ஆனால் என் எப்பவும் ' வேறு மனநிலை' கொண்டவன் கதையுள்ள படங்கள் மட்டுமே திருக்கிறார் என்று கேள்வி
எழத்தான் செய்கிறது.
பூஜவின் முடிவும், வசனங்களும் படத்தை தளர்த்தி கொஞ்சம் இழுவை யாக்கி விடுகிறது என்றாலும்,
சினிமா விற்காக காம்ப்ரமைஸ் பண்ணாமல் - இதயத்தை ஏதோ செய்யும் அந்த சில காட்சிகளையும், அப்புறம் அந்தமாதிரி முடிவையும் கொடுத்த துணிச்சலை பாராட்ட வேண்டும்.
கடைசியில் கொஞ்சம் இழுக்கிறது. இதயம் வலுவில்லாதவர்கள் பார்க்க முடியாது .இப்படி சில குறைகள்
இருந்தாலும் -இப்படி ஒரு படத்தை தந்தத்துக்கும், தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாச்சும் இந்த முயற்சிக்காகவும்
பாருங்களேன்.
" நான் பாலாவின் ரசிகன்" - என்று மணிரத்னம் சொன்னது உண்மை என்று புரியும்.
: Movie Review by - Paraman Pachaimuthu
: Category ' Manakkudi Talkies ' Cinema | www.manakkudiyan.com
<< 'Previous entries of cinema Category
<<- - -Back to Main Page

0 Responses
Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.